துாய்மை பணியாளர்கள் வேறு வேலைக்கு ... மாற்றம்: நகராட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு அதிரடி
துாய்மை பணியாளர்கள் வேறு வேலைக்கு ... மாற்றம்: நகராட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு அதிரடி
ADDED : ஆக 31, 2024 12:44 AM
சென்னை:மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை பார்க்கும் துாய்மை பணியாளர்களை, வேறு பணிகளுக்கு மாற்றி, குப்பை கையாளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் குப்பை கையாளும் பணியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொண்டு வருகின்றன. துாய்மை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர்.
குற்றச்சாட்டு
அதனால், அவர்களில் பலர் அதிகாரிகள் பேச்சை மதிப்பதில்லை; துாய்மை பணியையும் முறையாக மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால், சென்னை உட்பட பல மாநகராட்சிகளில் குப்பை கையாளும் பணி, மண்டலங்கள் வாரியாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ஏற்கனவே 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சென்னையில் தற்போது, நிரந்தர பணியாளர்களாக உள்ள, 1,500 பேர் உட்பட, மாநிலம் முழுதும் உள்ள 5,000 பேர் ஓய்வுபெறும் வரை, அரசு பள்ளிகள், வளாகங்கள், பூங்காக்களில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலம் முழுதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டாம் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
குப்பை தேக்கம்
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிரந்தர பணியாளர்களாக இருப்பவர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறும் வேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. குறிப்பாக, அவர்கள் தினமும் பணி செய்யும் இடங்களில், குப்பை தேக்கம் அதிகமாக காணப்படுகின்றன.
குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இவர்களை கண்காணிப்பதற்கு தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்க வேண்டியுள்ளது. இதற்கான செலவும் அதிகரிக்கிறது.
தனியார்
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, துாய்மை பணி, தனியாரிடம் விடப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் துாய்மை பணிகள் தனியாரிடம் தரப்பட்டு வருகிறது.
அங்குள்ள நிரந்தர துாய்மை பணியாளர்கள், மாற்று பணிக்கு பயன்படுத்தப்படுவர். இப்பணியிடங்களில் இனி நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டர். மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும், இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
போராட்ட அறிவிப்பு
தமிழகம் முழுதும், 50,000 பேருக்கு மேல் துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் தான் நிரந்தர பணியாளர்கள். தி.மு.க., ஆட்சி வந்ததும் மற்றவர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பணி நிரந்தரம் கிடையாது என்ற உத்தரவை திரும்ப பெறாவிட்டால், மாநிலம் முழுதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம்.
- பாலசுப்ரமணியன், செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம்.