‘கிளுகிளு’ செயலி மூலம் அழைத்து வழிப்பறி: 3 வாலிபர்கள் சிக்கினர்
‘கிளுகிளு’ செயலி மூலம் அழைத்து வழிப்பறி: 3 வாலிபர்கள் சிக்கினர்
UPDATED : நவ 14, 2026 08:54 PM
ADDED : நவ 14, 2026 08:54 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், 22. கொடிகரம்பை பகுதியை சேர்ந்த கபிலன், 23, மற்றும் கீரமங்கலத்தை சேர்ந்த, 16 வயது வாலிபர் உட்பட, மூவர் ‘கிளுகிளு’ செயலி வாயிலாக சிலரை அழைத்து வழிப்பறி செய்ததால், கைது செய்யப்பட்டனர்.
கரம்பக்காடு கிராமத்தில் கடந்த 9ம் தேதி அதே ஊரை சேர்ந்த பிரபாகரன், 30, என்பவர் இரவில் தனியாக அவரது பைக்கில் சென்ற போது, வழிமறித்த கும்பல் அவரை தாக்கி பைக், மொபைல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றதாக, கீரமங்கலம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
அதேபோல, 11ம் தேதி இரவில் மறமடக்கி பகுதியில், 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பைக்கில் வந்த பிரபு என்பவரை தாக்கி, அவரிடம் ‘ஜிபே’ ரகசிய எண்ணை வாங்கி உடனே, 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு எண்ணுக்கு மாற்றி கொண்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் மொபைல்போன் எண்களை வைத்து, வழிப்பறி செய்த மர்ம நபர்களின் இருப்பிடத்தை, அறந்தாங்கி போலீசார் கண்டறிந்து, 16 வயது வாலிபரை கைது செய்தனர்.
மேலும், கபிலன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்து, இவர்களிடம் போலீசார் விசாரணையில், கிளுகிளு செயலியை பயன்படுத்தி பலரிடமும் பேசியுள்ளனர். அதன்பின், இந்த செயலியில் சபலத்துடன் ‘சாட்டிங்’ செய்வர்களை குறிவைத்து, அவர்களிடம் பணம் பறித்து வந்ததாக தெரிவித்தனர்.
அறந்தாங்கி போலீசார், மூவரிடம் இருந்து பைக், மொபைல்போன்களை பறிமுதல் செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
