இரண்டு மலை ஏறினால் சிரமமாகி விடும் எம்.எல்.ஏ.,வை கிண்டலடித்த சபாநாயகர்
இரண்டு மலை ஏறினால் சிரமமாகி விடும் எம்.எல்.ஏ.,வை கிண்டலடித்த சபாநாயகர்
ADDED : செப் 01, 2026 02:54 AM
சென்னை: மலை சுற்றுலாதலம் குறித்து கேள்வி எழுப்பிய, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வை, சபாநாயகர் பிரபாகர் கிண்டலடித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - சம்பத் குமார்: அரூர் தொகுதி தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் 1,300 ஆண்டுகள் பழமையானது. இங்கு தாய்மார்கள் பாலுாட்டும் அறை, உடைமாற்றும் அறை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகளை செய்து, சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்.
அமைச்சர் ராஜேஷ்குமார்: சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின், கள ஆய்வு செய்து, நிதிநிலைமைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
சம்பத்குமார்: என் தொகுதியில், சுற்றுலா தலங்கள் இல்லை. சித்தேரி மலையில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள வள்ளிமதுரை அணைகட்டை சுற்றுலா தலமாக மேம்படுத்தி தர வேண்டும்.
சபாநாயகர் பிரபாகர்: அந்த மலைக்கு போய், இந்த மலைக்கு இறங்கி வந்தால் சிரமமாகி விடும்; வேண்டாம். ஏற்கனவே கேட்ட மலை தொடர்பாக, துணை கேள்வி கேளுங்கள்.
தி.மு.க., - அசோக்குமார்: பேராவூரணி தொகுதியில் உள்ள புதுப்பட்டினம் கடற்கரை, மெரினா கடற்கரை போல, வெள்ளை மணல் கொண்ட அழகான கடற்கரை. அங்கு செல்வதற்கு தனியாக சாலை, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
அமைச்சர் ராஜேஷ் குமார்: ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்கள் பகுதியில் சுற்றுலாதலம் குறித்து கேள்வி கேட்கின்றனர்.
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், ஒவ்வொரு மாவட்டமாக கள ஆய்வுக்கு சென்று, கலெக்டர்களுடன் ஆலோசித்து, என்னென்ன தேவை என்பதை கண்டறிந்து, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிதிநிலைமைக்கு ஏற்ப பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
