பல்கலைக்கழகங்களை அபகரிக்கும் அக்கிரமம் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஆவேசம் யு.ஜி.சி., அறிக்கையை திரும்ப பெற தீர்மானம்
பல்கலைக்கழகங்களை அபகரிக்கும் அக்கிரமம் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஆவேசம் யு.ஜி.சி., அறிக்கையை திரும்ப பெற தீர்மானம்
ADDED : ஜன 09, 2025 10:47 PM
சென்னை:''எல்லாரும் படித்து வேலைக்கு போய் தலை நிமிர்வதை பார்த்து பிடிக்காதவர்களால், தொடர்ச்சியாக கல்வி துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பல்கலைகளில் துணை வேந்தர் நியமிப்பது தொடர்பாக, கவர்னர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் நேற்று, அரசினர் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தடுப்பணை
அதை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கல்வி என்ற நீரோடையை மீண்டும் தடுக்க, எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லாரும் படித்து, எல்லாரும் வேலைக்கு போய், எல்லாரும் தலை நிமிர்வது பிடிக்காததால், தொடர்ச்சியாக கல்வி துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.
பள்ளி கல்வியை சிதைப்பதற்காகவே, புதிய தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்து திணிக்கின்றனர். அரசு பொதுத்தேர்வு என்ற பெயரால், வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியை தொடர முடியாமல் செய்ய போகிறார்கள். அதை, தமிழக அரசு கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது.
பல்கலைகளை சிதைக்கும் முயற்சியை, மத்திய அரசு துவங்கி விட்டது. துணை வேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வு குழுவை, கவர்னர் தீர்மானிப்பார் என்று, யு.ஜி.சி., விதிமுறை வகுத்துள்ளது.
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னர் கையில் கொடுப்பது, பல்கலைகளை சிதைக்கும் காரியமாகவே இருக்க முடியும். அதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே அரசுக்கும், கவர்னருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் தேர்வு குழுவில், யு.ஜி.சி., பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை கவர்னர் நியமித்தார்; நாம் அதை ஏற்கவில்லை.
அநியாயம்
இந்த மோதலுக்கு ஆக்கப்பூர்வமாக தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை, கவர்னர்களுக்கு வழங்குவது சரியல்ல; முறையுமல்ல.இவர்களாக ஒரு உத்தரவை போட்டு விட்டு, அதை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம்.
மாநில அரசுகள் தங்கள்பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைகளை, அபகரித்து கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விதிமுறை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில உரிமைகளில் தலையிடுவது, மாநில அரசுகளை சிறுமைப்படுத்தும் செயல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும். நியமன பதவிகளில் ஒரு சில ஆண்டுகள் இருந்து விட்டு போய் விடுபவர்களுக்கு, ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வை புரிந்து கொள்ள இயலாது.
மத்திய அரசு, கல்வி துறையில் எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வது இல்லை.வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத நிலை என, வரம்பு மீறும் தனியார் பல்கலைகளுக்கு கடிவாளம் போடுவதற்கு சிறு துரும்பை கூட, மத்திய அரசு மறுக்கிறது.
வழக்கு தொடர்வோம்
பட்ஜெட்டில், உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து கொண்டே வரும் மத்திய அரசு, ஒரேயொரு புதிய உயர் கல்வி நிறுவனத்தை கூட அமைக்கவில்லை.
தலைசிறந்த கல்வி நிறுவனங்களை, நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழகம், கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது; அப்படி இருக்கவும் முடியாது.
கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்கால தலைமுறையை காக்க, தமிழக சட்டசபையில் ஒட்டு மொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்த தீர்மானத்தை ஏற்று, மத்திய அரசு மனம் மாறாவிட்டால், மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.