டாடா வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்; 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்!
டாடா வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்; 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்!
UPDATED : செப் 28, 2024 12:19 PM
ADDED : செப் 28, 2024 12:12 PM

சென்னை: ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று(செப்.,28) முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும், இந்த ஆலையால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவில், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் உற்பத்தி, விற்பனையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு இடையில், கையெழுத்தானது. பணப்பாக்கத்தில்470 ஏக்கரில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது.
இன்று(செப்.,28) சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தலைவர் சந்திரசேகரன், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கார் உற்பத்தி ஆலை மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த தொழிற்சாலையில் மட்டும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழகமே முகவரி
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழகம் தான் முகவரியாக உள்ளது. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதால் அதிகமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளது டாடா நிறுவனம். டாடா குழுமத்தை சேர்ந்த 15 நிறுவனங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். இந்தநிறுவனத் தலைவர் இளைஞர்களின் முன்மாதிரியாக உள்ளார்.
டாடா குழுமம் மேலும் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களில் சீரான வளர்ச்சி என்பது தான் நம் இலக்கு. புதிய ஆலையை உருவாக்க ராணிப்பேட்டையை தேர்வு செய்த டாடா நிறுவனத்திற்கு நன்றி. அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து டாடா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படித்த சந்திரசேகர், டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்திருப்பது பெருமை. உங்கள் நிறுவனத்தின் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் உதவிகளைச் செய்ய வேண்டும்; ஏனென்றால் இது நமது மாநிலம்.
நம்பர் ஒன் தமிழகம்
மின்சார வாகன உற்பத்தியில் தமிழகம் தான் இந்தியாவின் தலைநகரம். இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மின்சார வாகனங்களில் 40% தமிழகத்தில் தான் உற்பத்தியாகின்றன. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகம் தான் நம்பர் ஒன்; இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.