மும்மொழி கொள்கையை ஏற்கவே மாட்டோம் பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
மும்மொழி கொள்கையை ஏற்கவே மாட்டோம் பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
ADDED : பிப் 21, 2025 12:46 AM
சென்னை:'தேசிய கல்வி கொள்கை மற்றும் சமக்ர சிக் ஷா திட்டத்தை இணைத்து பார்க்காமல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாயை விடுவிக்க, பிரதமர் மோடி தலையிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தின் கல்வி மற்றும் சமூக சூழலில், இரு மொழி கொள்கை ஆழமாக வேரூன்றியுள்ளது. அதை பின்பற்றுவதில் தமிழகம் எப்போதும் உறுதியாக உள்ளது.
நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகள் மும்மொழி கொள்கையை பின்பற்றுவதால் தான், தமிழகத்தில் அவை நிறுவப்படவில்லை. எங்கள் இரு மொழி கொள்கையில், எந்தவொரு மாற்றமும் கொண்டு வர உத்தேசிப்பது, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரிய அளவில் பயன் அளிக்காது.
தேசிய கல்வி கொள்கை யில் குறிப்பிட்டுள்ள சில விதிகள் குறித்து, தமிழக அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதி, மத்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளது.
மத்திய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான சமக்ர சிக் ஷா திட்டத்தையும், தேசிய கல்வி கொள்கையை பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் ஒன்றாக பொருத்தி பார்ப்பது ஏற்க முடியாதது.
ஒரு மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தை கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் மத்திய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சி தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயல்.
கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும். 2024 - 25ம் ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 2,152 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

