நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்கள் கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்கள் கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : நவ 26, 2024 11:44 PM
சென்னை:'கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்; நிவாரண முகாம்களை, அனைத்து வசதிகளுடன் தயாராக வைத்திருக்க வேண்டும்' என, கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கன மற்றும் அதிகன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில், கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, கடலுார் மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்று, அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை தெரிவித்தனர். 'இம்மாவட்டங்களில் போதுமான எண்ணிக்கையில், நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. பல்துறை மண்டல குழுக்கள், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன' என்று, கலெக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கையாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலுார் மாவட்டங்களுக்கு, தலா ஒரு தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை குழு மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இரண்டு குழுக்கள் விரைந்துள்ளன.
கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையின்போது தாழ்வானப் பகுதிகளில் இருந்து, மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்துவர வேண்டும். வெள்ளநீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி பங்கேற்றனர்.