நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : டிச 01, 2024 01:18 AM

சென்னை:“மழை பாதிப்பு உள்ள மாவட்டங்களில், முழுமையாக நிவாரண நடவடிக்கையில் ஈடுபடும்படி, அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்றார். அங்கிருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், மழை, நிவாரண முகாம்கள் விபரம் மற்றும் தண்ணீரை வெளியேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை, முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகளை செய்து கொடுக்கவும், முதல்வர் அறிவுரை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு, பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தலா மூன்று; கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு, தலா இரண்டு குழுக்கள் என, மொத்தம் 18 பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் அளித்த பேட்டி:
இரண்டு, மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. சென்னை மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்களுடன், அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தோம்.
நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முழுமையாக நிவாரண நடவடிக்கையில் ஈடுபட, அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு, நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. மழைநீர் வடிந்து வருகிறது.
தற்போது பிரச்னை எதுவும் இல்லை. சென்னையில் தண்ணீர் தேங்கும் இடத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், பிரச்னை இல்லை. எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.