சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும் தான் திராவிட மாடல்: ஸ்டாலின்
சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும் தான் திராவிட மாடல்: ஸ்டாலின்
ADDED : டிச 23, 2024 10:05 PM

சென்னை: சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும் தான் திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை பெரம்பூரில் தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசியதாவது;
ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கிற சொற்களே எந்த அரசியல் பேசுகிறோம் என்று நமக்கு புரியா விட்டாலும் மக்களுக்கு புரியும். எந்த நோக்கத்துக்காக உழைக்கிறோம் என்பதை அது உணர்த்தும்.
சிறுபான்மையின மக்களுக்கு துரோகங்களை செய்துவிட்டு வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையின நண்பர்களை போல நடிப்பவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் யார் என்று நான் பேரை சொல்லி அடையாளப்படுத்த விரும்பவில்லை. அடையாளப்படுத்தி தான் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது இல்லை. உங்களுக்கு அவர்களை நன்றாக தெரியும்.
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் பெரும்பான்மையில் சொற்பமாக விதைக்கக்கூடிய வெறுப்பு அரசியலுக்கு அஞ்சக்கூடாது. சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும் தான் திராவிட மாடல்.
மக்கள் வேறுபட்டு இருந்தாலும் மனங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். மனதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான் பண்பட்ட முன்னேறிய சமுதாயத்துக்கு ஒரு அடையாளமாக விளங்கிட முடியும். அப்படிப்பட்ட சமூகம் தாம் நமது தமிழ் சமூகமாக இருக்கிறது.
எந்த மதமாக இருந்தாலும் அன்பையும், சகோதரத்துவத்தையும் விதைக்க வேண்டும். சக மனிதர்கள் மீது பாகுபாடு காட்டுவதாக இருக்கக்கூடாது. எல்லோரும் சமத்துவமாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை தூண்டி, அரசியல் செய்பவர்களுக்கு தான் நாங்கள் எதிரிகள்.
இன்று மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் ஒரு அரசை நடத்திக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வலிமையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது தி.மு.க., தான்.
ஆனால் அந்த சட்டத்துக்கு ஆதரவாக பார்லி.யில் ஆதரவளித்த கட்சி எது என்றால் அது அ.தி.மு.க.. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அதற்கு ஆதரவாக எப்படி எல்லாம் பேசினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை பலத்தை அளிக்கவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்லி ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை சிதைத்து, ஒற்றை இந்தியாவாக உருவாக்க பார்க்கின்றனர்.
ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற ஒற்றை எதேச்சதிகார முடிவை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அதற்கு எதிராக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

