பயத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் கவர்னர் குறித்து முதல்வர் கிண்டல்
பயத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் கவர்னர் குறித்து முதல்வர் கிண்டல்
ADDED : ஜூன் 04, 2025 12:00 AM
சென்னை:“நீதிமன்றத்துக்கு போய் விடுவோம் என்று பயந்து, சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்திருக்கலாம்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பதவிகளை வழங்கும் வகையில், இரண்டு சட்ட மசோதாக்கள், கடந்த ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
பின், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு மசோதாக்களுக்கும் கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளுக்கும், ஊரக உள்ளாட்சிகளில் 12,913 மாற்றுத்திறனாளிகளுக்கும் நியமன பதவிகள் கிடைக்க உள்ளன.
இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கியது குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
கவர்னர் ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்தது தான். அதில், எந்த பிரச்னையும் இல்லை. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவில் கையெழுத்திட்டு, அவர் ஒப்புதல் வழங்கிஉள்ளார்.
ஒருவேளை, நாங்கள் நீதிமன்றத்திற்கு போய் விடுவோம் என்று பயந்து, அவர் ஒப்புதல் அளித்திருக்கலாம்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.

