‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் :மத்திய குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் :மத்திய குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2026 10:10 PM
சென்னை: ‘நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யவேண்டும்’ என, தமிழகம் வந்த மத்திய குழுவிடம், முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும், முறைகேடுகளை தடுக்கவும், தேர்வு முறைகளில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ளவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி, உறுப்பினர்களான சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மத்திய கல்வித்துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால் ஆகியோர், தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜயை நேற்று சந்தித்தனர். முதல்வருடன், 30 நிமிடங்கள் கலந்துரையாடினர்.
அப்போது, முதல்வர் விஜய், உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும், ‘நீட்’ மற்றும் அதை போன்ற பிற தேர்வுகள் நடத்த, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதிலாக, பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக சட்டசபையில், ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
மருத்துவ படிப்புகள், பிற உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில், ‘நீட்’ போன்ற தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என தெரிவித்தார்.
