வேலை உறுதி திட்டத்துக்கு புதிய சட்டம் வேண்டாம் ; பிரதமருக்கு முதல்வர் கடிதம்
வேலை உறுதி திட்டத்துக்கு புதிய சட்டம் வேண்டாம் ; பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : டிச 19, 2025 06:46 AM

சென்னை: 'ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான, 'விபி ஜி ராம் ஜி' சட்ட முன்வடிவை, செயல்படுத்த வேண்டாம்' என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை, 'விபி ஜி ராம் ஜி திட்டம்' என மாற்றுவதற்கான சட்ட முன்வடிவை பார்லிமென்டில் அறிமுகப்படுத்தியதை எதிர்க்கிறேன்.
இந்த சட்ட முன்வடிவில், உத்தரவாத வேலைவாய்ப்பை, ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், மற்ற விதிகள் அடிப்படை கொள்கைகளை பலவீனப்படுத்துகின்றன.
மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களின் நிதியையும், நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், இது கடுமையாக பாதிக்கும்.
மேலும், 60:40 என்ற நிதி பங்கீட்டு முறை, ஏற்கனவே நெருக்கடியை சந்தித்து வரும், பல மாநிலங்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
திட்டத்தின் பெயரை மாற்றுவது, காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகார பரவல் குறித்த தொலைநோக்கு பார்வையை சிதைக்கும் வகையில் உள்ளது.
இந்த சட்ட முன்வடிவு, சிறப்பாக செயல்படும் தமிழகம் போன்ற மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை சீர்குலைக்கும்.
எனவே, 'விபி ஜி ராம் ஜி' சட்ட முன்வடிவை செயல்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

