21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு அரங்கம் வன்னியர் ஆதரவை பெற முதல்வர் வியூகம்
21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு அரங்கம் வன்னியர் ஆதரவை பெற முதல்வர் வியூகம்
ADDED : நவ 19, 2024 07:32 PM
சென்னை:இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு, சிலையுடன் கூடிய அரங்கத்தை. 29ம் தேதி திறந்து வைத்து, வன்னியர் ஓட்டுகளை வளைக்க, முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார்.
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, 1987ல், வட மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடந்தது. போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; 21 பேர் பலியாகினர். அவர்களின் வாரிசுகளுக்கு பல ஆண்டுகளாக, எந்த சலுகையும் வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது, உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை, அரசு வழங்கி வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 பேருக்கும், சிலைகளுடன் கூடிய நினைவு அரங்கம் கட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்காக, விழுப்புரம் மாவட்டம் வழுதாரெட்டியில், 5 கோடி ரூபாய் மதிப்பில், நினைவரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு, 4 கோடி ரூபாய் மதிப்பில், மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
இவற்றை வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். வன்னியர்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும்படி, பா.ம.க.,வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்னையை கையில் எடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்த, பா.ம.க., தலைமை திட்டமிட்டு இருந்தது.
இது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, வன்னியர் ஓட்டுகளை வளைக்கும் வகையிலானப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாகவே, 21 வன்னியர் இனத்தைச் சேர்ந்த சமூக நீதி போராளிகளுக்கு, நினைவு அரங்கம் திறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாட்கள் அங்கேயே முகாமிட்டு, வன்னியர் சமுதாய முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கவுரவிக்க உள்ளார்.