கூட்டுறவுத்துறை ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் மார்ச் 25 முதல் துவங்க திட்டம்
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் மார்ச் 25 முதல் துவங்க திட்டம்
ADDED : மார் 12, 2024 02:26 AM
சிவகங்கை; கூட்டுறவு ஊழியர்களுக்கு புதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 25 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம்(டாக்பியா) முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் 4,500 தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.
இவைகளின் கீழ் மாநில அளவில் 33,700 கிராம அங்காடிகள் உள்ளன. இதில் 30 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். நகர் கூட்டுறவு கடன் சங்க, தொடக்க கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு நியாயமான புதிய சம்பள உயர்வை அறிவிக்க வேண்டும். மாநில, மாவட்ட தேர்வாணையக்குழு தேர்வு செய்த பணியாளர்கள் மாதம் ரூ.6,250 மட்டுமே பெறுகின்றனர்.
அவர்களை சொந்த ஊரிலோ அல்லது அருகில் உள்ள சங்கத்திலோ நியமிக்க வேண்டும். தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பதவி உயர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
அடங்கல் இன்றி வழங்கிய பயிர் கடன்களுக்காக செயலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்குதல், இலவச வேட்டி சேலை வழங்குதல், கைரேகை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை தவிர்க்க வேண்டும்.
இவை உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 25 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

