மார்ச் வரை ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு கோ - ஆப்டெக்ஸ் அறிவிப்பு; ஊழியர்கள் எதிர்ப்பு
மார்ச் வரை ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு கோ - ஆப்டெக்ஸ் அறிவிப்பு; ஊழியர்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 12, 2025 12:28 AM
சென்னை:'கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள், இம்மாதமும், அடுத்த மாதமும், ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
தமிழகத்தில், கோவை, கடலுார், சென்னை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலுார் என, 35 நகரங்களிலும், பெங்களூரு, மும்பை, விஜயவாடா என, 15 வெளிமாநில நகரங்களிலும், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் தற்போது, 'இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சலுகை திட்டம் அமலில் உள்ளது.
ஒத்துழைப்பு
இதற்கு மக்களிடையே ஆதரவு உள்ளதால், இந்த மாதம் மட்டுமின்றி, அடுத்த மாதம் இறுதி வரை, ஞாயிற்றுக்கிழமை களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் என, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில், தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், ஞாயிற்றுக்கிழமையன்று கடைகளை திறக்க முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம்.
இந்நிலையில், பிப்., மார்ச் மாதம், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகள் திறக்கப்படும் என, கோ - ஆப்டெக்ஸ் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மனிதாபிமானமற்றது
வார நாட்களில் உணவு இடைவேளையிலும், பணிபுரிய தயாராக இருக்கிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவு மனிதாபிமானமற்றது.
பணியாளர்களின் வார விடுமுறையை பறிப்பதாக, இந்த உத்தரவு உள்ளது. நிர்வாகம், பணியாளர் இடையே பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடந்து வரும் நிலையில், இத்தகைய உத்தரவு பிறப்பித்திருப்பது, தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானது.
இவ்விஷயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் மார்ச், 8 மகளிர் தினத்தில், பட்டினி போராட்டம் நடத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

