பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன்
பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூன் 15, 2025 07:12 AM

மதுரை, : ''அடுத்தாண்டு தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் ''என பா.ஜ., மாநிலதலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரை வலையங்குளத்தில் பா.ஜ.,வில் இளைஞர்கள் இணையும் விழா நயினார் நாகேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்திய சேதுபதி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பா.ஜ.வில் இணைந்தனர்.
நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
தி.மு.க., பொதுக்குழுவுக்கு பின் அமித் ஷா மதுரை வந்ததற்கு பல காரணம் இருக்கும். மதுரையில் எந்த நிகழ்வு நடந்தாலும் வெற்றி தான். அது தி.மு.க.,வுக்கு பொருந்தாது. 1976ல் தி.மு.க., பொதுக்குழு மதுரையில் நடந்தது. அதன் பின் 12 ஆண்டுகளுக்கு தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை.
அதுபோல் தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வராது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.
தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். உலக தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தோல்வியே கண்டிராதவர். பா.ஜ., தேசத்துக்கான கட்சி. இதில் யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம். ஆதித்ய சேதுபதி இந்த விழாவை தனது சொந்த செலவில் நடத்தியுள்ளார் என்றார்.
ஆதித்ய சேதுபதி கூறுகையில் ''பா.ஜ., ஆழமான கொள்கையை கொண்ட உலகின் பெரிய கட்சி. ஆட்சியில் நாட்டிற்கு பல நலத்திட்ட உதவிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளது. அதனை அகற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், கோவை முருகானந்தம், கார்த்திகாயினி, நரசிங்க பெருமாள், ராஜசிம்மன், மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.