ADDED : அக் 25, 2025 02:12 AM
மதுரை: 'ஜல்லிக்கட்டு போல், தமிழக அரசு சட்டம் இயற்றினால் சேவல் சண்டைக்கு அனுமதியளிக்க முடியும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி மூவேந்தன், 'காரைக்கேணியில் அக்., 26ல் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க பேரையூர் தாசில்தார், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
விலங்குகள் வதை தடுப்பு சட்டம், பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு, எந்த ஒரு விலங்கையும் மற்றொரு விலங்குடன் சண்டையிட துாண்டும் எந்த நபரையும் அல்லது விலங்குகள் சண்டையிட ஏற்பாடு செய்தல், ஒரு இடத்தை பயன்படுத்துதல் அல்லது நிர்வகித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் எவரையும் தண்டிக்கிறது .
உயர்நீதிமன்ற அமர்வு, 'விலங்கு' என்ற வார்த்தைக்கு பறவைகள் உட்பட என, விளக்கம் அளித்துள்ளது. சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக்கூடாது என, டி.ஜி.பி., சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் பாரம்பரிய முறையில் சேவல் சண்டை நடத்தலாம். சேவல்களின் கால்களில் கத்திகளை கட்டக்கூடாது என நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. அரசியலமைப்பின் 142வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்.
உயர்நீதிமன்றங்களுக்கு இத்தகைய சலுகைகள் இல்லை. கலாசாரம் என்ற பெயரில், ஜல்லிக்கட்டு போன்ற சில நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஜல்லி க்கட்டு போராட்டத்தின் விளைவாக 2017ல் சட்ட திருத்தம் செய்ததுபோல், ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்றினால், மனுதாரருக்கு உரிமை ஏற்படலாம். மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் விலங்கு சண்டை நிகழ்வை சட்டம் தடை செய்கிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது .
இவ்வாறு உத்தரவிட்டார்.

