தேங்காய் விலை உயர்வு கொப்பரை உற்பத்தி நிறுத்தம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
தேங்காய் விலை உயர்வு கொப்பரை உற்பத்தி நிறுத்தம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
ADDED : மார் 30, 2025 03:22 AM

பொள்ளாச்சி:தேங்காய் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கொப்பரை உற்பத்தி கைவிடப்பட்டு, உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரை மாநிலம் முழுவதும் அனுப்பப்படுகிறது.
மழை பொழிவின்றி வறட்சி, தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர். தற்போது, கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்தாலும், மரத்தில் தேங்காய் இல்லாததால், விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கினாலும், வெள்ளை ஈ, வேர் வாடல் நோய் காரணமாக, உற்பத்தி குறைந்ததால், தேங்காய், கொப்பரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால், கொப்பரை உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்பதால், உற்பத்தியாளர்கள் கொப்பரை உற்பத்தியை துவங்கவில்லை. இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:
கொப்பரை கிலோ, 175 ரூபாயாகவும், தேங்காய் ஒரு டன், 66,௦௦௦ ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. வறட்சி, வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் நோயினால், 60 சதவீதம் உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கிய நிலையில், கொப்பரை, தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தேங்காய் வாங்கி, கொப்பரை உற்பத்தி செய்தால், கிலோவுக்கு, 190 - 200 ரூபாய் விலை கிடைக்க வேண்டும்.
இதனால், நஷ்டம் தான் ஏற்படும் என்பதால், கொப்பரை உற்பத்தியாளர்கள், உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டாததால், நெகமம், பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கொப்பரை உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இத்தொழிலை நம்பியுள்ள, ௫,௦௦௦க்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு தென்னை விவசாயம் அழிந்து விடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.