ADDED : அக் 14, 2024 06:14 AM

கோவை: கோவையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய துவங்கியது. தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதிகளில் இடியுடன், இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கணுவாய், சின்னத்தடாகம், ஆனைகட்டி, குருடம்பாளையம் பகுதிகளில் தொடர் மழையால், சங்கனுார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வருவாய் துறையினரால் அழைத்து செல்லப்பட்டனர்.
வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னுார், பேரூர், மதுக்கரை தாலுகாக்களில் கனமழையால்,10 ஓட்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. குடிசை வீடுகளும் சரிந்தன.
வீடுகளை இழந்த மக்கள், வருவாய் துறையினரால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர், வெள்ளம் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு, வெள்ளநீர் வெளியேற்றப்படுவதை துரிதப்படுத்தினர். லங்கா கார்னர், கிக்கானி பள்ளி உள்ளிட்ட இடங்களில் தேங்கிய நீரை, மாநகராட்சி ஊழியர்கள் மோட்டர் வாயிலாக வெளியேற்றினர்.
கோவை நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தில், தனியார் பஸ் வெள்ளத்தில் சிக்கியது.
பயணியர் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.