கோவை, மதுரை மெட்ரோ திட்டம் அறிவித்தவர் ஜெ., அ.தி.மு.க., தகவல்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் அறிவித்தவர் ஜெ., அ.தி.மு.க., தகவல்
ADDED : நவ 21, 2025 06:41 AM

சென்னை : 'ஜெயலலிதா அறிவித்த கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை வைத்து, தி.மு.க., அரசியல் ஆதாயம் தேடுகிறது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவு:
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 'கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்' என, அறிவித்தார். இதை மறைத்து, தி.மு.க., ஆட்சியில் அறிவித்த திட்டம் போன்ற தோற்றத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது, 20 லட்சம் மக்கள் தொகை உள்ளிட்ட காரணங்களால், தமிழக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது. கடந்த 14ம் தேதியே கடிதம் வந்தும், கோவைக்கு பிரதமர் மோடி வரும் நாளில், அதை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, திட்டங்களை பெற முடியாத நிலையில் தி.மு.க., அரசு உள்ளது. தன் இயலாமையை மறைக்க, கோவை, மதுரையில் தி.மு.க., போராட்டம் நடத்தியுள்ளது. வரும் 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

