பால் உற்பத்தியாளர்களுக்கு சிறு பால் பண்ணை திட்டம்; 5,000 பேருக்கு தலா 4 கறவை பசு
பால் உற்பத்தியாளர்களுக்கு சிறு பால் பண்ணை திட்டம்; 5,000 பேருக்கு தலா 4 கறவை பசு
ADDED : நவ 21, 2025 06:42 AM

சென்னை: ''தமிழகம் முழுதும் 5,000 பால் உற்பத்தியாளர்களுக்கு, 135 கோடி ரூபாயில் சிறிய பால் பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, ஆவின் மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸ் தெரிவித்தார்.
பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில், 5,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பெண்களுக்கு, ஆண்டு முழுதும் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில், 4 சதவீத வட்டி மானியத்துடன் கூடிய சிறு பால் பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது, பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸ் கூறியதாவது:
இத்திட்டத்தை கடந்த வேளாண் பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. இதை, ஆவின் நிர்வாகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வான பயனாளிகளுக்கு, தலா நான்கு கறவை பசு அல்லது எருமை மாடுகள் வழங்கப்படும்.
அவற்றுக்கு, மூன்று ஆண்டு காப்பீடும் செய்யப்படும். பயனாளிகள், 30,000 ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும். மீதி, 2.7 லட்சம் ரூபாய் வங்கி வாயிலாக பெற்று தரப்படும். வங்கிக்கு செலுத்த வேண்டிய 4 சதவீத வட்டி தொகை, அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.
இதில், 30 சதவீதம் பெண்களுக்கும், 18 சதவீதம் எஸ்.சி., - எஸ்.டி., பயனாளிகளுக்கும், 1 சதவீதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு தரப்படும். பயனாளிகள் குறைந்தது ஒரு கறவை பசு வைத்திருக்க வேண்டும்; பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
அரை ஏக்கர் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருப்போர் மற்றும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பால் வழங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 21 வயது முதல் 60 வயது உள்ள பயனாளிகள், அருகில் உள்ள பால் கூட்டுறவு சங்கம் மற்றும் அரசு கால்நடை டாக்டர்களை அணுகலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

