ரவுடிகளுக்கு புரியும் மொழி; பேசிப்பார்த்த கோவை போலீஸ்: நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்!
ரவுடிகளுக்கு புரியும் மொழி; பேசிப்பார்த்த கோவை போலீஸ்: நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்!
UPDATED : செப் 21, 2024 06:06 PM
ADDED : செப் 21, 2024 08:38 AM

கோவை; கோவையில் பிரபல ரவுடியான ஆல்வின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடிகள் கொட்டம்
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் ரவுடிகள் கொட்டம் ஒடுக்கப்படும், அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற என்கவுன்ட்டர்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், ரவுடிகள் கொட்டம் அடங்க ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது, சென்னையை பின்பற்றி கோவை காவல்துறை பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளது.
13 வழக்குகள்
இதுபற்றிய விவரம் வருமாறு; நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆல்வின். பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 13 வழக்குகள் காவல்துறை ரெக்கார்டுகளில் பதிவாகி உள்ளன. கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடுரோட்டில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தில் தொடர்பு உள்ள ஆல்வினை பிடிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ரகசிய தகவல்
இந்நிலையில் கொடிசியா பகுதியில் ரவுடி ஆல்வின் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்றனர். போலீசார் சூழ்ந்துவிட்டதை உணர்ந்த ஆல்வின், தான் வைத்திருந்த கத்தியால் காவலர் ராஜ்குமார் என்பவரை வெட்டி உள்ளார்.
குண்டு பாய்ந்தது
இடது கையில் வெட்டுக்காயம் ஏற்படவே சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளார். ஒரு குண்டு காற்றில் பறக்க, மற்ற 2 குண்டுகள் ரவுடி ஆல்வினின் 2 கால்களையும் துளைத்தது. குண்டுகாயங்களுடன் ஓட முடியாமல் சிக்கிக் கொண்ட ஆல்வினை பிடித்த போலீசார், பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.