கத்தாரில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறது கோவை மாணவர்களின் ஹைட்ரஜன் வாகனம்
கத்தாரில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறது கோவை மாணவர்களின் ஹைட்ரஜன் வாகனம்
ADDED : பிப் 06, 2025 02:04 AM

கோவை:குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய வாகனம் தயாரித்து பாராட்டுதல்களை பெற்றுள்ளனர். இக்கல்லுாரியைச் சேர்ந்த, 'டீம் ரினியூ' எனும், 14 பேர் அடங்கிய மாணவர் குழுவால், இப்புதிய வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை வடிவமைத்த மாணவர் பிரதிஷ் கூறியதாவது:
இவ்வாகனம் எடை குறைவானது. ஹைட்ரஜன் எரிந்து ஆற்றலை வெளிப்படுத்தும்போது, கெட்ட வாயுக்கள் வெளியாகாது. அழிந்து வரும், 'அட்லாண்டிக் புளூ மார்லின்' என்ற மீனின் உருவத்தை, மாதிரியாக கொண்டு வடிவமைத்துள்ளோம்.
எடை குறைவாக இருக்க, பழைய பி.வி.சி., கழிவுகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பொருளை பயன்படுத்தியுள்ளோம். டிஷ்யூ பேப்பர்களில் இருந்து கிடைத்த பொருளையும் பயன்படுத்தியுள்ளோம்.
எங்கள் வாகனம், 1 கிலோ ஹைட்ரஜனுக்கு, 272 கி.மீ., வரை செல்லக்கூடியது. வரும் காலத்தில் இதை, 500 கி.மீ., வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் வாகனத்தை இயக்க ஒரு கி.மீ.,க்கு, 50 பைசா செலவாகும். எடை குறைவாக தயாரிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு குறைவு ஏற்படாது.
ஹைட்ரஜன் கசிந்தால் அதுகுறித்த தகவல்கள் டிரைவர், கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரியும். மணிக்கு, 35 கி.மீ., வேகத்தில் செல்லும். இது, அடுத்த தலைமுறைக்கான ஆற்றல் சேமிக்கும் வாகனமாக இருக்கும். இதன் வாயிலாக, பொதுபோக்குவரத்து வாகனங்களை தயாரிப்பதற்கான, சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.