UPDATED : நவ 04, 2024 05:45 AM
ADDED : நவ 04, 2024 04:21 AM

கோவை: கோவை விளாங்குறிச்சியில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். முன்னதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.
தமிழக அரசு நிறைவேற்றி வரும் மக்கள் நலத்திட்டங்கள், மக்களை முழுமையாக சென்றடைவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யவுள்ளார்.
முதல் மாவட்டமாக 5, 6ம் தேதிகளில் கோவையில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.
நாளை, 5ம் தேதி கோவை வரும் முதல்வர், விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2.98 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள, எல்காட் டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நாளை மறுதினம், காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மற்றும் அறிவியல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நுாலகம் 1.98 லட்சம் சதுரடி பரப்பில் அமைகிறது.
இந்நிலையில், முதல்வர் திறந்து வைக்கவுள்ள டைடல் பார்க் வளாகத்தை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மூன்றாவது நாளாக ஆய்வு செய்தார்.