ADDED : மார் 15, 2024 12:45 AM

சென்னை:வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ நேற்று சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட அறிவிப்பு:
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து, கடல் ஆமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுதும், எட்டு மாவட்டங்களில், 10 இடங்களில் இதற்கான மையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில், தற்காலிக அடிப்படையில், கடல் ஆமை முட்டை பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.
இதில், கால நிலை மாற்ற பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, ஒன்பது மாவட்டங்களில், 45 இடங்களில், கடல் ஆமை முட்டை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்கள் வாயிலாக தற்போது வரை, 2.20 லட்சம் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர், தன்னார்வலர்கள், ஆய்வாளர்கள் இதற்கான தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

