'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை'
'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை'
ADDED : மார் 11, 2024 03:59 PM

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை எனவும், கால்நடைத் துறைக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வத்திராயிருப்பு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவராம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்ட கிராமங்களில் வத்திராயிருப்பு இல்லை' என வாதிடப்பட்டது. இதனையடுத்து 'ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் கால்நடைத் துறைக்கு தான் இருக்கிறது' எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

