ADDED : பிப் 10, 2024 11:59 PM
சென்னை:பணிகள் எதையும் செய்யாமல், 2.48 கோடி ரூபாய்க்கு பொய் கணக்கு காட்டிய கிராம பஞ்சாயத்து தலைவர், செயலர் மீதான புகார் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ராணிப்பேட்டை கலெக்டர் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், பெரிய எசலபுரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு:
அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட இச்சிபுதுார் கிராமத்தில், மின் விளக்குகள், ஆழ்துளை கிணறுகள், பம்பு செட்டுகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு, கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த பணிகளும் நடக்கவில்லை. மாறாக, பணிகள் செய்ததாகவும், அதற்காக செலவிடப்பட்டதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. பணிகள் நடந்ததாகக் கூறி, இச்சிபுதுார் கிராம பஞ்சாயத்து பணம், 2.48 கோடி ரூபாயை, கிராம பஞ்சாயத்து தலைவர் பத்மநாபன், செயலர் இப்ராஹிம் ஆகியோர் எடுத்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி, மாவட்ட கலெக்டர், பஞ்சாயத்துகளுக்கான உதவி இயக்குனர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு, கடந்தாண்டு ஏப்., 10ல் புகார் மனு அளித்தேன்.
அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இச்சிபுதுார் கிராம பஞ்சாயத்து தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; செயலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்ட ருக்கு அறிக்கை அனுப்பப் பட்டு உள்ளது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், கடந்தாண்டு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர், பஞ்சாயத்து உதவி இயக்குனர், அரக்கோணம் பி.டி.ஓ., ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராமச்சந்திரன் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, வழக்கறிஞர் கிருஷ்ணன் ஆஜராகி, அரசு பணம் எவ்வாறு கையாடல் செய்யப்பட்டது என்பதற்கான, புகைப்படங்களுடன் கூடிய ஆவணங்களை தாக்கல் செய்து வாதிட்டனர்.
அதை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கில், வரும் 19ம் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் உள்ளிட்டோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.