காவல் நிலையம் முன் பெண் தற்கொலை கலெக்டர் அறிக்கை அளிக்க உத்தரவு
காவல் நிலையம் முன் பெண் தற்கொலை கலெக்டர் அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : ஏப் 23, 2025 03:06 AM
சென்னை:தஞ்சையில் காவல் நிலையம் முன், இளம்பெண் விஷம் குடித்து இறந்த விவகாரத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியை சேர்ந்தவர் தினேஷ்,32. பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரை ஏப்., 8-ந் தேதி, ஒரு வழக்கு விசாரணைக்காக நடுக்காவேரி போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த தினேஷின் சகோதரிகள் மேனகா, கீர்த்திகா ஆகியோர், தன் சகோதரரை விடுவிக்குமாறு, இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.
அதை ஏற்காமல், அவர்களை இன்ஸ்பெக்டர் அவதுாறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த சகோதரிகள் இருவரும், காவல் நிலையம் முன் விஷம் குடித்தனர். அதில், கீர்த்திகா உயிரிழந்தார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, 'கீர்த்திகாவை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மீது எடுத்த நடவடிக்கை என்ன, எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கீர்த்திகா குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டதா என்பது குறித்து, மே, 15ம் தேதிக்குள் தஞ்சை கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

