ஊராட்சிகளில் வாடகை நிர்ணயம் செய்ய குழு அமைக்க கலெக்டர்களுக்கு உத்தரவு
ஊராட்சிகளில் வாடகை நிர்ணயம் செய்ய குழு அமைக்க கலெக்டர்களுக்கு உத்தரவு
ADDED : ஆக 13, 2025 10:45 PM
சென்னை:ஊராட்சி காலி நிலங்கள், கடைகள் வாயிலாக, வருமானம் ஈட்டுவதற்கு வழிகாட்டுதல்கள் வழங்க குழு அமைக்கும்படி, மாவட்ட கலெக்டர் களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுதும் ஊரக உள்ளாட்சிகளுக்கு சொந்தமாக, காலி நிலங்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றை குத்தகைக்கு விடுதல், கடைகளை வாடகைக்கு விடுதல் வாயிலாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு வருமானம் ஈட்ட, திட்டமிடப்பட்டு உள்ளது. வாடகை நிர்ணயம் செய்வதில், பல இடங்களில் பிரச்னைகள் உள்ளன.
காலி இடங்களை குத்தகைக்கு வழங்குவதிலும், இழுபறி நீடித்து வருகிறது. எனவே, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, வழிகாட்டுதல் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பான அரசாணையை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
இதை செயல்படுத்தும்படி, மாவட்ட கலெக்டர் களுக்கு, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்:
மாவட்ட கலெக்டர் தலைமையில், வழிகாட்டு குழு அமைக்க வேண்டும்.
இதில், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், ஊராட்சி உதவி இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பர்.
அத்துடன், இரண்டு வணிகர் சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.
வழிகாட்டுதல் குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி விவாதித்து, கிராம ஊராட்சிகளின் காலி நிலங்கள், கடை களுக்கான வாடகை, குத்தகை, நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.