காதல் விவகாரத்தில் கல்லுாரி மாணவர் கொலை: காரை ஏற்றி திமுக கவுன்சிலரின் பேரன் வெறிச்செயல்
காதல் விவகாரத்தில் கல்லுாரி மாணவர் கொலை: காரை ஏற்றி திமுக கவுன்சிலரின் பேரன் வெறிச்செயல்
UPDATED : ஜூலை 30, 2025 01:37 PM
ADDED : ஜூலை 30, 2025 06:55 AM

சென்னை: சென்னையில், பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவை போலீசார் தேடிய நிலையில், இன்று அவர் போலீசில் சரண் அடைந்தார்.
சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய், 20. இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். அதேபோல், அயனாவரம் பி.இ., கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிஷேக், 20. இவரும், அதே கல்லுாரியில் படித்து வருகிறார்.
நித்தின் சாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் நண்பர்கள். இவர்கள், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, திருமங்கலம் பள்ளி சாலையில், பள்ளித்தோழன் மோகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அதே பகுதியில் உள்ள 'ராவுத்தர்' பிரியாணி கடையில் சாப்பிட்டனர். அதன் பின், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை அபிஷேக் ஓட்ட, பின்னால் நித்தின் சாய் அமர்ந்து, ஹெல்மெட் அணியாமல் சென்றார். திருமங்கலம் பள்ளி சாலையில் இருந்து பார்க் சாலை நோக்கி இருவரும் சென்றுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், பள்ளி சுவரில் துாக்கி வீசப்பட்டு, நித்தின் சாய்க்கு தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நித்தின் சாய் உடலை கைப்பற்றி, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில், நித்தின்சாய் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அபிஷேக், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
போலீசாரும் விபத்து என, வழக்கு பதிந்தனர். கார் மோதியதில் நொறுங்கிய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் தேடி வந்தனர்.கொலை அம்பலம் இந்நிலையில், திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில், நித்தின் சாயின் தந்தை சுரேஷ் என்பவர், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'என் மகன் சொகுசு காரை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில், தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் மகள் வழி பேரன் சந்துரு உள்ளார். விரிவான விசாரணை நடத்த வேண்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு திருமங்கலம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, இது திட்டமிட்ட கொலை என, தெரியவந்தது.
'சிசிடிவி' பதிவில், நித்தின் சாய், அபிஷேக் இருவரும் சென்ற இரு சக்கர வாகனம் மீது, ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று மோதியதும், இருவரும் தனியார் பள்ளி சுற்றுச்சுவரில் துாக்கி வீசப்பட்டு, நித்தின்சாய் சாலை ஓரமாக விழுந்ததும் தெரிந்தது.
அப்போது, ரேஞ்ச் ரோவர் காரை ரிவர்ஸ் எடுத்து, நித்தின் சாய் மீது மீண்டும் ஏற்றும் காட்சிகள் பதிவாகி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, திருமங்கலம் போலீசார், சந்துரு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கே.கே.நகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, நித்தின்சாய் வகுப்பில் படித்து வரும் கல்லுாரி மாணவர் வெங்கடேசன் என்பவர், ஒரு தலையாக காதலித்துள்ளார். மிரட்டல் அந்த மாணவியை, பிரபல இசையமைப்பாளர் நடத்தி வரும் கல்லுாரி ஒன்றில் படித்து வரும் பிரணவ் என்பவரும் காதலித்து வருவதாக தெரியவருகிறது.
வெங்கடேசனின் ஒருதலை காதல் தொல்லை குறித்து, அந்த மாணவி பிரணவிடம் தெரிவித்துள்ளார். இந்த 'லவ் டார்ச்சர்' குறித்து பிரணவ், தன் சீனியரான கல்லுாரி மாணவர் சந்துரு என்பவரிடம் தெரிவித்துள்ளார். இவர், தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் மகள் வழி பேரன்.
இந்த காதல் விவகாரம் தொடர்பாக, பிரணவ், சந்துரு தரப்பினர், மாணவி மீதான காதலை கைவிடுமாறு வெங்கடேசனை மிரட்டி உள்ளனர். இவர்களது பேச்சுக்கு, வெங்கடேசன் செவி சாய்க்கவில்லை. சம்பவத்தன்று, ரேஞ்ச் ரோவர் காரில், சந்துரு தரப்பினர் அண்ணா நகர் சென்றுள்ளனர். அந்த காரை, ஆரோன் என்பவர் ஓட்டியுள்ளார். இவர், வழக்கறிஞர் ஒருவரின் மகன். காரில், சந்துரு, எட்வின், சுதன் மற்றும் பிரணவ் ஆகியோர் இருந்துள்ளனர். அனைவரும், வெவ்வேறு கல்லுாரி மாணவர்கள்
வெங்கடேசனை, அண்ணா நகர் காவல் நிலையம் அருகே வரவழைத்து மிரட்டியுள்ளனர். அதன்பின், வெங்கடேசன், இரு சக்கர வாகனத்தில் நித்தின்சாய் மற்றும் அபிஷேக் மற்றும் இவரது நண்பர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த திருமங்கலம் பள்ளி சாலைக்கு சென்றுள்ளனர். சந்துரு தரப்பினர், இவரை பின் தொடர்ந்து காரில் சென்றுள்ளனர். பிறந்த நாள் கொண்டாடிய இடத்திலும் பிரச்னை எழுந்துள்ளது.
அப்போது, வெங்கடேசன் மீது காரை ஏற்ற முயன்றுள்ளனர். அதில், வெங்கடேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேசனுக்கு ஆதரவாக நித்தின்சாய், அபிஷேக் மற்றும் அவர்களது நண்பர்கள் சந்துரு தரப்பை தட்டிக்கேட்டுள்ளனர். இவர்களும், வெவ்வேறு கல்லுாரியை சேர்ந்த நண்பர்கள். அப்போது, தங்கள் மீது மோத வேகமாக வந்த சந்துருவின் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின், ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தை, அபிஷேக் ஓட்ட, நித்தின்சாய் பின்னால் அமர்ந்து, இருவரும் பார்க் சாலை நோக்கி சென்றுள்ளனர். அப்போது தான், காரை ஏற்றி நித்தின்சாய் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பிரணவ், சுதன் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும், 20 வயதுடைய கல்லுாரி மாணவர்களை தேடி வருகிறோம்.
காதல் விவகாரத்தில், பிரச்னைக்குரிய மாணவர்கள் இருவரையும் விட்டு விட்டு, அவருக்கு ஆதரவாக இருந்த நித்தின் சாய் கொலைக்கு, கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்த சந்துரு தான், இக்கொலையை நடத்தியுள்ளார் என, நித்தின் சாய் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபற்றி விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சந்துரு இன்று போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார்.
மின்னல் வேகத்தில் காரில் துரத்தினர் காரில் இருந்த நபர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நண்பனின் சகோதரனுக்கு பிரச்னை என்பதால், அந்த இடத்திற்கு சென்றோம். காரில் நாங்கள் துரத்தப்பட்ட போது, நித்தின் சாய், சந்து பகுதியில் செல்லுமாறு கூறினான். அதன்படி சென்று தப்பினோம். அப்படியும் அவர்கள் விடவில்லை. துரத்தித் துரத்தி மின்னல் வேகத்தில் வந்து மோதினர். என் கண் எதிரே நித்தின் சாய் இறந்துவிட்டான். - உயிர் தப்பிய அபிஷேக்
பணம், பதவி இருந்தால், யாரையும் சாகடிக்கலாமா? தி.மு.க., பிரமுகர் தனசேகரின் பேரன் சந்துரு தான், என் மகன் சாவுக்கு காரணம். சந்துருவுக்கும் எனது மகனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நண்பரின் பஞ்சாயத்துக்கு சென்று தான் பிரச்னை ஏற்பட்டது. என் மகன் மீது காரில், இரண்டு முறை இடித்துவிட்டு, சந்துரு சிரித்துள்ளார். பணம், பதவி இருந்தால், யாரை வேண்டுமானாலும் சாகடிக்கலாமா? என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும். என் மகன் ரவுடி இல்லை. அவனை கொன்று, தலைமறைவாக உள்ள சந்துருவை கைது செய்ய வேண்டும். - பூமொழி, நித்தின் சாயின் தாய்.
ரவுடி வெட்டிக்கொலை
தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்மொழி, 31. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர் தெரு அருகே நேற்று மதியம் பைக்கில் வந்த இவரை, மூவர் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி தப்பியது. இதில் அருண்மொழி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். காசிமேடு போலீசார் அருண்மொழியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு உயிரிழந்தார். காசிமேடு போலீசாரின் விசாரணையில், சொத்து பிரச்னையால் உறவினரே கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட அருண்மொழியை, 'குதிரை' வெங்கடேசன் என்பவர், தத்தெடுத்து வளர்த்துள்ளார். 'குதிரை' வெங்கடேசனின் தம்பி மகன் ரூபன், 31. சொத்து பிரச்னை தொடர்பாக, ரூபனுக்கும் அருண்மொழிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறின்போது, அருண்மொழி, ரூபனை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரூபன், தன் நண்பர்களான செந்தில்குமார், கமல் ஆகியோருடன் சேர்த்து, அருண்மொழியை கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 7வது தெருவைச் சேர்ந்த ரூபன், 31, வடபெரும்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார், 31, கமல், 23, ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -