அனைத்து வகை கல்லுாரிக்கும் சமமான மாணவர் சேர்க்கை வேண்டும் கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தல்
அனைத்து வகை கல்லுாரிக்கும் சமமான மாணவர் சேர்க்கை வேண்டும் கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2025 09:44 PM
மதுரை:'தமிழகத்தில் அரசு, உதவிபெறும், சுயநிதி என அனைத்து வகை கல்லுாரிகளிலும் கூடுதல் மாணவர் சேர்க்கையை சீரான முறையில் அதிகரிக்க அனுமதியளிக்க வேண்டும்' என தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்க தலைவர் அஜீத்குமார் லால்மோகன், செயலர் சேதுபதி தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் 2025 - 2026 கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் தேவையுள்ள கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறைவான சதவீதம்
இதுபோல் ஆய்வக வசதிக்கு ஏற்ப அரசுஉதவிபெறும் கல்லுாரிகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு 10 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதித்து உத்தரவிட்டு உள்ளது.
தற்போதைய சூழலில், அரசு கல்லுாரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கையை உயர்த்திக்கொள்ளும் உத்தரவு வரவேற்கத்தக்கது.
அதேநேரம், உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் சுயநிதி கல்லுாரிகளுக்கு குறைவான சதவீதம் வழங்கப்பட்டது பாகுபாடாகவும், மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது.
எனவே, சமத்துவ உரிமை அடிப்படையில் அனைத்து வகை கல்லுாரிகளுக்கும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கையை பூர்த்தி செய்து ஒரே மாதிரியான கல்வித் திட்டங்களை வழங்க வேண்டும்.
சமவாய்ப்பு அடிப்படையில் அனைத்து கல்லுாரிகளும், நிர்வாக மேலாண்மை வகையை பொருட்படுத்தாமல் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சமமாக நடத்தப்பட வேண்டும். சுயநிதி கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவது மாணவர்களையும், நிறுவன வளர்ச்சியையும் பாதிக்கும்.
பெரும்பாலான கல்லுாரிகள் சிறந்த, மாணவர்கள் விரும்பத்தக்க பாடப் பிரிவுளுடன் தரமான கல்வியையும் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றன. இம்மாதிரியான சூழலில் மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவது தகுதியான மாணவர்கள் விரும்பிய படிப்புகளில் சேர முடியாத சூழலை ஏற்படுத்தும்.
அனுமதி
அரசு கல்லுாரிகளுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கையை அனுமதிப்பதன் மூலம் சுயநிதி கல்லுாரிகளின் மாணவர்கள், நிறுவனங்களின் நிலைத் தன்மையை பாதிக்கும். தனியார் கல்லுாரிகள் கிராமப்புற, பின்தங்கிய மாணவர்கள் படிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவை, அரசிடம் எவ்வித நிதியுதவியும் பெறாமல் உட்கட்டமைப்பு வசதி, தரத்தை பராமரிக்கின்றன. எனவே, தனியார் சுயநிதி கல்லுாரிகள் பாதிக்காத வகையில் கூடுதல் மாணவர் சேர்க்கை அனுமதியை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.