500 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட மளிகை கடைக்காரர் கைது!
500 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட மளிகை கடைக்காரர் கைது!
ADDED : டிச 24, 2025 08:40 PM

திருப்பூர்: திருப்பூரில், 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில், கடந்த, 15ம் தேதி செலுத்தப்பட்ட பணத்தில், 500 ரூபாய் நோட்டு, 12 எண்ணிக்கை போலியானது என்பது தெரிந்தது. வங்கி மேலாளர் மணிமாறன் நடத்திய விசாரணையில், கவுதம் என்பவர் ஏ.டி.எம். வாயிலாக பணம் செலுத்தியது தெரிந்தது.
புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசார், போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட, முருகம்பாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் ராஜேந்திரன், 45 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்; கடையில் இருந்த கலர் ஜெராக்ஸ் மெஷினை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் மளிகை கடையுடன் சேர்த்து, வட மாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர் பணம் பரிவர்த்தனை செய்வது, வட்டிக்கு பணம் வழங்கி வருகிறார். ஜெராக்ஸ் மெஷினில் 500 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். கடந்த மூன்று மாதமாக வட்டிக்கு பணம் வாங்க வரும் நபர்களுக்கு ஒன்றிரண்டு போலி ரூபாய் நோட்டுகளை கலந்து வழங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் கூறுகையில், 'யாருக்கெல்லாம் இவர் வட்டிக்கு பணம் கொடுத்தார், அதில் ஏதாவது போலி ரூபாய் நோட்டுக்கள் இருந்ததா என்று சந்தேகம் உள்ளது. இதன் விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வருகிறோம். அவரை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க உள்ளோம்' என்றனர்.

