ADDED : மார் 29, 2025 06:55 AM

சென்னை; மஹாராஷ்டிரா துணை முதல்வரை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ராவுக்கு, இடைக்கால முன்ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, மஹாராஷ்டிராவில் நடத்திய நிகழ்ச்சி, கடந்த பிப்., 23ல் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நடவடிக்கையை விமர்சனம் செய்திருந்தார்.
குணால் கம்ராவின் நிகழ்ச்சி, தங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, கடந்த 23ம் தேதி, அந்தேரி கிழக்கு எம்.எல்.ஏ., முர்ஜி காசி படேல் புகார் அளித்தார்.
குணால் கம்ரா மீது, மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மும்பையில் பிறந்த குணால் கம்ரா, 2021 முதல், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில், தனக்கு முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டிரான்சிட்' மனுவை, குணால் கம்ரா தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சுந்தர் மோகன், ஏப்ரல் 7ம் தேதி வரை குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.