நீதிபதி குறித்து கருத்து 'மாஜி' போலீஸ் அதிகாரிக்கு ஜாமின் தர கோர்ட் மறுப்பு
நீதிபதி குறித்து கருத்து 'மாஜி' போலீஸ் அதிகாரிக்கு ஜாமின் தர கோர்ட் மறுப்பு
ADDED : அக் 19, 2025 12:46 AM
சென்னை: கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிக்கு ஜாமின் வழங்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
கரூரில் செப்டம்பர், 27ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், அக்., 7ல் கைது செய்யப்பட்ட வரதராஜன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ''கருத்து சுதந்திரம் என்ற பெயரில், நீதித்துறை, அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது, ஆதாரமில்லாத கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரித்து உள்ளது.
''மனுதாரர் மீது ஏற்கனவே, இதுபோல கருத்து பதிவிட்டதற்காக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஜாமின் வழங்கக் கூடாது,'' என, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வரதராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.