ADDED : ஏப் 24, 2025 06:47 AM
'தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், கடந்த நிதியாண்டில், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது' என, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வணிக வரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, பெட்ரோல் மற்றும் டீசல், மது வகைகள் மீதான மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றின் வாயிலாக, தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு வருவாய் கிடைக்கிறது.
வரி ஏய்ப்பை தடுக்க, ஜி.எஸ்.டி., பதிவு குறித்து, வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வரி செலுத்தியதில் தவறை கண்டறிய, புதிய தொழில்நுட்பங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 - 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டில், 12,139 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

