4 மாதத்தில் ரூ.44,841 கோடி வருவாய் வணிக வரித்துறை சாதனை
4 மாதத்தில் ரூ.44,841 கோடி வருவாய் வணிக வரித்துறை சாதனை
ADDED : ஆக 09, 2025 09:06 PM
சென்னை:வணிக வரித்துறை வாயிலாக நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூலை வரை, தமிழக அரசுக்கு, 44,841 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 44,038 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இந்தாண்டில், 803 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரியில் மாநில பங்கு, பெட்ரோல் - டீசல் மற்றும் மதுபானம் மீது விதிக்கப்படும் மதிப்புகூட்டு வரி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி தீர்வு போன்றவற்றின் வாயிலாக, வருவாய் கிடைக்கிறது.
நடப்பு, 2025 - 26ல் ஏப்., முதல் ஜூலை வரையிலான காலத்தில், வணிக வரித் துறைக்கு, ஜி.எஸ்.டி.,யில் மாநில பங்கு, மதிப்புகூட்டு வரி வாயிலாக, 44,841 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 44,038 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில் மாநில பங்கு வாயிலாக, 25,035 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 24,863 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில் மதிப்புகூட்டு வரி வாயிலாக கிடைத்த வருவாய், 19,806 கோடி ரூபாயில் இருந்து, 19,175 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில் மாநில பங்கு அதிகரித் துள்ள நிலையில், மதிப்பு கூட்டு வரி வாயிலான வருவாய் குறைந்திருப்பதற்கு, மதுபான விற்பனை குறைவே காரணம் என, தெரியவந்துள்ளது.