தீபாவளி நெரிசலை சமாளிக்க கூடுதல் கவுன்டர்கள் சுங்கச்சாவடிகளுக்கு ஆணையம் உத்தரவு தொப்புள் கொடி வீடியோ விவகாரம்
தீபாவளி நெரிசலை சமாளிக்க கூடுதல் கவுன்டர்கள் சுங்கச்சாவடிகளுக்கு ஆணையம் உத்தரவு தொப்புள் கொடி வீடியோ விவகாரம்
ADDED : அக் 23, 2024 12:18 AM
சென்னை:தீபாவளி பயண நெரிசலை தவிர்ப்பதற்காக, சுங்கச்சாவடிகளில் கூடுதல் கவுன்டர்களை திறக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 65 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தீபாவளி நெருங்கும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த பலரும், சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்வர்.
வாகன நெரிசல்
இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டரைபெரும்புதுார், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லுார், சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகரிக்கும்.
இங்கு, 'பாஸ்டேக்' வசதி இருந்தாலும், 'ஸ்கேன்' செய்வதற்கு மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சொந்த ஊர் செல்வதற்குள் பண்டிகை பாதி முடிந்துவிடும்.
இதனால், பலரும் அவதிக்குள்ளாவர். எனவே, வாகன ஓட்டிகள், பயணியர் வசதிக்காக மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி, சுங்கச்சாவடி நிர்வாகங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், இரண்டு புறங்களிலும் அதிகபட்சமாக, தலா ஆறு கவுன்டர்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
அறிவுறுத்தல்
எனவே, எந்த பகுதியில் இருந்து வாகனங்கள் அதிகம் செல்கிறதோ, அந்த பகுதியில் கவுன்டர்கள் எண்ணிக்கையை அதிகரித்து மற்ற பகுதிகளில், கட்டண வசூல் கவுன்டர்கள் எண்ணிக்கையை குறைக்கும்படி, சுங்கச்சாவடி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
'ஸ்கேன்' செய்யும் கருவிகளை கூடுதலாக பயன்படுத்தவும், அதற்கேற்ப ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.