எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஊழல் வழக்கு பட்டியல் கேட்ட த.வெ.க., நிர்வாகிக்கு ஆணையம் 'சம்மன்'
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஊழல் வழக்கு பட்டியல் கேட்ட த.வெ.க., நிர்வாகிக்கு ஆணையம் 'சம்மன்'
ADDED : அக் 31, 2025 12:47 AM
சென்னை:  தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்கும்படி மனுதாரர் அளித்த மனு மீது, 12 வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது, மனுதாரர் ஆஜராகும்படி தகவல் ஆணையம் தாமதமாக அழைப்பாணை அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் ஆதித்ய சோழன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் பதவியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்கும்படி, கடந்தாண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தார்.
அந்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்தில் முதல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இருப்பினும், தகவல்கள் வழங்கப்பட வில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் மீதான விசாரணை, நீதிபதி என்.மாலா தலைமையில் கடந்த ஜூலை மாதம் நடந்தது. முடிவில், 'மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது, 12 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதுகுறித்து, மனுதாரர் ஆதித்ய சோழன் கூறுகையில், ''உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த மாதம் 10ம் தேதிக்குள், மாநில தகவல் ஆணையம் விசாரணை நடத்தி தன் முடிவை வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், தாமதமாகவே அழைப்பாணை வழங்கியுள்ளது.
''உயர் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் விசாரணைக்கு அழைக்காமல், கடைசி நாளில் தான், மாநில தகவல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது,'' என்றார்.
அவருக்கு மாநில தகவல் ஆணையம் அனுப்பியுள்ள அழைப்பாணையில், 'நவ., 3ம் தேதி காலை 10:30 மணிக்கு ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராக முடியாதபட்சத்தில், அதற்கான காரணத்தை ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

