ADDED : அக் 23, 2024 10:51 PM
சென்னை:சொத்துக் கணக்கு முறைகேடுகளை ஆராய குழு நியமிக்கவும், வங்கி கணக்கை முடக்கி வைக்கவும், தமிழக ஐ.என்.டி.யு.சி., செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக ஐ.என்.டி.யு.சி., அவசர செயற்குழு கூட்டம், பொதுச்செயலர் பன்னீர்செல்வம் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* ஐ.என்.டி.யு.சி., மற்றும் அறக்கட்டளையின் கணக்குகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. சுயேச்சை மற்றும் நடுநிலை உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து, சொத்து கணக்குகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால், அதற்கு பொறுப்பான நபர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்
* நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வ அதிகாரியை நியமனம் செய்யும் வரை, ஐ.என்.டி.யு.சி., யூனியன் மற்றும் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளின் செயல்பாட்டை முடக்க வேண்டும்
* கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் வாயிலாக, கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட, தலா நான்கு லட்சம் ரூபாய் தருவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் வாரியத்தின் வாயிலாக வீடு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.