தமிழகத்தில் அவசர நிலை பிரகடனமா முதல்வரை கேட்கிறார் கம்யூ., பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் அவசர நிலை பிரகடனமா முதல்வரை கேட்கிறார் கம்யூ., பாலகிருஷ்ணன்
ADDED : ஜன 04, 2025 02:53 AM

விழுப்புரம், :தமிழகத்தில் அடக்குமுறை தொடர்வதால், அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா என்று, மார்க்சிஸ்ட் கம்யூ., பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்.
விழுப்புரத்தில் நேற்று இரவு நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது தட்டி கேட்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து இதுவரை ஏன் பேசவில்லை.
அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் கனவில் உள்ளது. அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும்.
ஆனால், கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனை கூட்டம் என்றாலும், போலீஸ் தடை போட்டு வழக்கு போடுகிறது. ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் அனுமதி மறுக்கிறது.
முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா.
ஏன், போலீஸ் துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. மா.கம்யூ., மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி கேட்டோம், மறுத்துவிட்டீர்கள், செங்கொடி பேரணிக்கும் தடை விதித்தீர்கள். இதன் மீதெல்லாம் ஏன் உங்களுக்கு அச்சம்.
எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்காமல் தடுப்பது ஏன். சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்றுவிடுமா.
கூட்டணி ஆட்சியில் நாங்கள் இல்லை. நிறைவேற்றாத திட்டங்களுக்கும் தி.மு.க., அரசு தான் பொறுப்பு. தமிழகத்தில் பட்டியிலின அடக்குமுறை அதிகமாக உள்ளது. இதற்காக தி.மு.க., எங்களை விமர்சிக்கலாம்; அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேசுகையில், ''கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டும், தனித்தனியாகவும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் போராடி வந்துள்ளோம். அதில் பல சாதனைகளையும் கண்டுள்ளோம்.
தமிழகத்தில் மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் இணைந்து பணியாற்றி வருகிறது.
இனி வரும் காலங்களிலும் இணைந்து பணியாற்றுவோம்,'' என்றார்.