ஜி.எஸ்.டி.,யில் சிறு தவறுக்கு பெரும் தொகை அபராதம் பேரம் பேசும் அதிகாரிகளால் நிறுவனங்கள் அலறல்
ஜி.எஸ்.டி.,யில் சிறு தவறுக்கு பெரும் தொகை அபராதம் பேரம் பேசும் அதிகாரிகளால் நிறுவனங்கள் அலறல்
ADDED : ஆக 19, 2025 10:15 PM
ஜவுளி, வாகன உதிரிபாகங்கள் போன்ற சரக்குகளை எடுத்துச்செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் அதிகாரிகள், ஜி.எஸ்.டி., ஆவணத்தில் சிறு தவறு இருந்தாலும், பெரும் தொகையை அபராதமாக விதிக்கின்றனர். அதன்பின், அபராதத்தை குறைக்க பேரம் பேசுவதாக, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் புகார் கூறுகின்றன.
ஜி.எஸ்.டி., சட்டத்தின்படி, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில், 11.50 லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர்.
ச ரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் வணிகவரி அதிகாரிகள், ஜி.எஸ்.டி., ஆவணத்தில் சிறு தவறு இருந்தாலும், வாகனத்தை அனுப்பாமல் முடக்கி, பெரும் தொகையை அபராதமாக விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கூறியதாவது:
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
'டெலிவரி' முகவரி கோவை, திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பம்ப் மோட்டார், ஜவுளி, பின்னலாடை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வாடிக்கை நிறுவனங்களுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் சரக்குகளை அனுப்புகின்றன.
குறிப்பாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துறைமுகம், விமான நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அப்போது, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கோட்பாட்டின் படி, ஆவணங்கள் தயாரித்து அனுப்பப்படுகின்றன.
இந்த ஆவணங்களில் வாகன பதிவு எண், 'டெலிவரி' செய்யும் முகவரி போன்றவற்றில் சில மனித தவறுகள் தெரியாமல் நிகழ்கின்றன. வணிக வரித்துறை அதிகாரிகள், எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது, சரக்கு வாகனங்களை மடக்கி சோதனை செய்கின்றனர்.
ஒரு வாகனத்தை தணிக்கை செய்யும் போது, சிறு தவறு இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட வணிகரின் ஜி.எஸ்.டி., பரிவர்த்தனை ஆவணங்களை, ஜி.எஸ்.டி., வலைதளத்தில் பதிவு செய்து, அவர்கள் தவறு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளாரா, ஜி.எஸ்.டி., ஒழுங்காக தாக்கல் செய்துள்ளாரா என்ற பின்னணியை, ஒரு நிமிடத்தில் கணினியில் பார்க்கும் வசதி உள்ளது.
முடக்கும் நிலை இதன் வாயிலாக சிறு தவறு என்பதை உறுதிசெய்து, வாகனங்களை விடுவிக்கும் முடிவை அதிகாரிகள் எடுக்கலாம். மேலும், சிறு தவறுகளுக்கு, 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவே வழிவகை உள்ளது.
அதை செய்யாமல், சிறு தவறு இருந்தாலும் வாகனங்களை முடக்குகின்றனர். உடனே, 50,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், ஜி.எஸ்.டி., மதிப்பில், 3 மடங்கு, 4 மடங்கு என, பெரும் தொகையை அபராதமாக விதிக்கின்றனர்.
பின், தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி, அதிகாரிகள் செல்கின்றனர். நேரில் செல்லும் போது அலைக்கழிக்கின்றனர். வாகனத்தை விடுவிக்குமாறு கூறினால், பேரம் பேசுகின்றனர். விரைவாக சரக்குகளை அனுப்ப வேண்டும் என்ற வணிகரின் முடிவை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, சாவகசமாக பேசுகின்றனர்.
அவசரமாக அனுப்ப வேண்டும் என்பதால், பணம் தர சம்மதித்ததும், சிறிய தொகையை அபராதம் விதித்து, வாகனங்களை அனுப்புகின்றனர். இதனால், துறைமுகத்திற்கு சரியான நேரத்தில் பொருட்களை அனுப்ப முடியாததால், கப்பல் கிளம்பி விடுகிறது. அடுத்த கப்பலில் அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப் பவில்லை எனில், அடுத்த ஆர்டர்கள் கிடைப்பதில்லை. வாகனங்களை முடக்குவதால், தேவையில்லாமல் மணிக்கணக்கில் தர வேண்டிய வாடகை, நாள் கணக்கில் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, மின் கட்டண உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், குறைந்த லாபத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களிடம், ஜி.எஸ்.டி., ஆவணத்தில் சிறிய தவறை காரணம் காட்டி அபராதம் வசூலிப்பது, தொழில்களை முடக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -