ரூ.12.52 லட்சம் மோசடி வழக்கில் நிறுவன முதலாளிக்கு சிறை உறுதி
ரூ.12.52 லட்சம் மோசடி வழக்கில் நிறுவன முதலாளிக்கு சிறை உறுதி
ADDED : ஜன 01, 2025 10:29 PM
சென்னை:மோசடி வழக்கில், தெலுங்கானா சமையல் காஸ் நிறுவன உரிமையாளருக்கான, மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை உறுதி செய்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், மணி என்பவர், 'பிரைட் கேஸ் பாட்டிலிங்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், 'ஸ்வஸ்திக் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் நடத்தி வரும் கோபால் மிட்டல், 34, அறிமுகமானார்.
தன் நிறுவனத்துக்கு, சமையல் காஸ் 18 டன் தேவைப்படுவதாக மணி கூறியுள்ளார். அதற்கு, ஆந்திராவில் இருந்து காஸ் அனுப்பி வைப்பதாக, கோபால் மிட்டல் உறுதி அளித்துள்ளார்.
இதை நம்பிய மணி, கோபால் மிட்டல் வங்கி கணக்குக்கு, 12.52 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார். உறுதி அளித்தபடி கோபால் மிட்டல், சமையல் காஸ் அனுப்பவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை. மணி அளித்த புகாரில், மயிலாப்பூர் போலீசார் கோபால் மிட்டல் மீது, மோசடி வழக்கு பதிந்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரர் மணிக்கு, கோபால் மிட்டல், 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மோசடி குற்றச்சாட்டின் கீழ், கோபால் மிட்டலுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, 2023 ஜன.,11ல் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து, கோபால் மிட்டல் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சி.உமாமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
'ஸ்வஸ்திக் என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மேல்முறையீடுதாரர் கூறுகிறார். ஆனால், 2014 மார்ச் 5ல், தன் தாய் கணக்கில் இருந்துதான், 12.52 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறுகிறார்.
வழக்குக்கு தொடர்பான பணப் பரிவர்த்தனை, 2014 மார்ச் 3ல் நடந்து உள்ளது. 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. தன் தாயின் வங்கிக் கணக்கில் இருந்துதான், இந்த தொகை வந்தது என்பதை, மேல்முறையீடுதாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.
எனவே, அவரின் சட்டவிரோத செயலில் தவறான, நேர்மையற்ற நோக்கம் பிரதிபலிக்கிறது; மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

