ADDED : ஜன 09, 2025 10:50 PM
சென்னை:''பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - காமராஜ்: கடந்த 2024 ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதை நம்பி, ஐந்து லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர்.
தண்ணீர் இல்லாமல், அக்டோபர் மாதத்தில் அணை மூடப்பட்டதால், இரண்டரை லட்சம் ஏக்கரில் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் குறுவைக்கு காப்பீட்டு திட்டம் கைவிடப்பட்டதால், விவசாயிகள் இழப்பீடு பெற முடியவில்லை.
பயிர் காப்பீடு செய்திருந்தால், ஹெக்டேருக்கு 84,000 ரூபாய் இழப்பீடு கிடைத்திருக்கும். இந்த ஆண்டு டெல்டாவில், 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மழையால் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேல் பயிர் சேதமடைந்துள்ளது. அதை கணக்கெடுத்து, இழப்பீடு வழங்க வேண்டும்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: கடந்த மூன்றாண்டுகளில் வறட்சி, திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, 1,059 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால், பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

