வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு
ADDED : டிச 06, 2025 01:50 AM

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகை, 2.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க, 2007ல் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே வழங்கப்பட்ட 2 கோடி, 41 லட்சம் ரூபாய் போக, மீதமுள்ள 2 கோடி, 59 லட்சம் ரூபாயை வழங்கி, நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்க, 2.59 கோடி ரூபாயை விடுவித்து, கடந்த மாதம் 26ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
'அதன் அடிப்படையில், சேலத்தை சேர்ந்த எல்லம்மாள் தவிர, 37 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
'இறந்த எல்லம்மாளுக்கு வாரிசுகள் இல்லாததால், அவருக்கு மட்டும் வழங்கப்படவில்லை' என, சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

