தென் மாநிலங்கள் அனைத்திலும் போட்டி: திருமாவளவன் அறிவிப்பு
தென் மாநிலங்கள் அனைத்திலும் போட்டி: திருமாவளவன் அறிவிப்பு
ADDED : பிப் 21, 2024 04:21 AM

''தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்கள் அனைத்திலும், வரும் லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் போட்டியிடும்,'' என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
டில்லியில், நேற்று அவர் அளித்த பேட்டி:
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது, பிற தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகியவற்றிலும், எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கவுள்ளனர்.
இதற்கு வசதியாக பொதுச்சின்னம் தேவைப்படுகிறது. எங்களது பானை சின்னத்தையே பொதுச்சின்னமாக ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அதனால் பொதுச்சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேசமயம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக செயல்படுவதாக தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் சரத் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்க்கின்றனர். அதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றும் என்றும் நம்புகிறோம்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில்தான் நின்றோம். யாரிடம் இருந்தும் நெருக்கடி இல்லை.
அதேசமயம், 2019 லோக்சபா தேர்தலின்போது வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து, அவர்களது சின்னத்தில் போட்டியிடும்படி, தி.மு.க., ஆலோசனையை வழங்கியது.
வரும் லோக்சபா தேர்தலில் பானை சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும். அதற்கு எந்த சிக்கலும் இல்லை.
வி.சி.,க்களுக்கு, தி.மு.க., கூட்டணியில் பொதுத்தொகுதி கேட்பது குறித்து பலரும் ஆச்சரியமாகக் கேட்கின்றனர். ஏன், நாங்கள் பொதுத் தொகுதியில் போட்டியிடக் கூடாதா?
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது டில்லி நிருபர் -

