திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு
ADDED : டிச 07, 2024 03:08 AM
சென்னை : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா கொண்டாடப்பட உள்ளது.
இதில், மாணவர்களிடம் திருக்குறளை எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுன்றன.
அதன்படி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்படுகிறது. 6 வயது வரை உள்ளோர் ஒரு அதிகாரம், 10 வயது வரை உள்ளோர் மூன்று அதிகாரங்கள், 14 வயது வரை உள்ளோர் ஐந்து அதிகாரங்களை ஒப்பு வித்து, அதை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
அதேபோல, திருக்குறளின் கருத்துக்களை தெளிவாக எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில், கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
அதில், 'கற்றலின் மேன்மை குறித்து திருக்குறள்' என்ற தலைப்பிலோ, 'அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு' என்ற தலைப்பிலோ, மூன்று பக்க அளவில் தட்டச்சு செய்த பி.டி.எப்., வடிவ கட்டுரையை அனுப்ப வேண்டும்.
மேலும், ஓவியம் வரையும் திறமையுள்ள, முதல் ஐந்து வகுப்பு மாணவர்கள், திருவள்ளுவரின் படத்தை வரைந்து அனுப்பலாம்; ஒரு குறளின் கருத்தையோ, திருக்குறளின் நன்மைகளை யோ ஓவியமாக வரைந்தும் அனுப்பலாம்.
குறும்படம் எடுக்கும் திறமை உள்ளோர், திருக்குறளை மையமாக வைத்து, மூன்று நிமிட குறும்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.
கவிஞர்கள், 16 வரிகளுக்குள், திருக்குறளின் சிறப்பு குறித்த கவிதையை எழுதி அனுப்பலாம்.
புகைப்படம் எடுக்கும் ரசனை உள்ளோர், தங்கள் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை அல்லது திருக்குறள் எழுதப்பட்ட இடத்தில் நின்று, 'செல்பி' எடுத்து அனுப்ப வேண்டும்.
இந்த படைப்புகளை, வரும் 18ம் தேதிக்குள், tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புகளை அனுப்புவோரை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் அழைத்து வாழ்த்தி, பதக்கம் வழங்கி கவுரவிப்பார்.