தி.மு.க., 'மாவட்டம்' மீது புகார்; நிர்வாகிக்கு மேடையில் அடி உதை; படம் எடுத்த நிருபருக்கு மிரட்டல்
தி.மு.க., 'மாவட்டம்' மீது புகார்; நிர்வாகிக்கு மேடையில் அடி உதை; படம் எடுத்த நிருபருக்கு மிரட்டல்
ADDED : செப் 14, 2024 04:05 PM

கோவை: கோவை மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் மீது புகார் கூறியவரை, கட்சியினர் அடித்து உதைத்தனர். அதை படம் எடுத்த தினமலர் நிருபருக்கு மிரட்டல் விடுத்து படங்களை அழிக்க வைத்தனர்.
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தி.மு.க., செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார்.கூட்டத்தில், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கவுன்சிலரும், இளைஞரணி முன்னாள் நிர்வாகியுமான, வைரம் செந்தில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும் படி கோரினார். ஆனால் வாய்ப்பு தரப்படவில்லை.
அப்போது ஒரு பிரிவினர் திருச்சி சிவாவுக்கு ஆட்டுக்குட்டி பரிசாக கொடுத்தனர். அப்போது திருச்சி சிவாவை சுற்றி நிர்வாகிகள் அனைவரும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது திடீரென மேடை ஏறிய பேரூராட்சி கவுன்சிலர் வைரம் செந்தில் பேசுகையில், ''மாவட்ட செயலாளர் ரவிக்கும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் இடையே தொடர்பு உள்ளது. இருவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் உள்ளது,'' என்றார்.
இதனால் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் செந்திலின் தோள் பட்டையில் மேடையிலேயே தாக்கினர். அவரை மேடையில் இருந்து கீழே இழுத்துச் சென்றனர். மண்டபத்தை ஒட்டி உள்ள பகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். ரவி தரப்பினருக்கும், செல்வம் தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இவை அனைத்தும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான திருச்சி சிவா முன்னிலையில் நடந்தன.
கடைசியில் பேசிய அவர், ' நாடாளுமன்றத்தில் தி.மு.க.,வுக்கு அந்தஸ்து கிடைக்க காரணமானவர்களின் நானும் ஒருவன். தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அண்ணாதுரை பேசும்போது, எங்களிடம் உள்ளது காலிகளின் கூட்டம் என்று காமராஜர் கூறுகிறார். ஆனால் காலிகளின் கூட்டம் அல்ல, கட்டுப்பாடு உள்ள வீரர்களின் கூட்டம்.''அதே போல் இங்கு புகார் கூறிய நிர்வாகியின் ஆதங்கம் புரிகிறது. பொறுத்திருக்க வேண்டும். புகார் இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். பொது மேடையில் பேசக்கூடாது. நானே 20 ஆண்டுகள் காத்திருந்த பிறகுதான் பொறுப்பு பெற்றேன். எனவே காத்திருந்தால் நிச்சயம் பொறுப்பு கிடைக்கும்,' என்றார் .
புகார் கூறிய செந்திலை ஒரு தரப்பு தி.மு.க.,வினர் சூழ்ந்து கொண்டு தாக்கியதை நமது நிருபர் போட்டோ எடுத்தார். இதையடுத்து நிர்வாகிகள் சிலர், நிருபருக்கு மிரட்டல் விடுத்தனர். நிருபரிடம் இருந்த இரண்டு மொபைல்களையும் பறித்து, அதில் உள்ள தள்ளு முள்ளு போட்டோக்களை அழித்து விட்டு திரும்ப கொடுத்தனர். 'தகராறு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடக்கூடாது' என மிரட்டல் விடுத்தனர்.

