உயர் அதிகாரிகள் மீது புகார்: மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்
உயர் அதிகாரிகள் மீது புகார்: மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்
UPDATED : ஜூலை 19, 2025 09:28 PM
ADDED : ஜூலை 19, 2025 09:07 PM

சென்னை: சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், மயிலாடுதுறை எஸ்.பி., உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய டி.எஸ்.பி., சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.
மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்டு இருந்த அலுவலக அரசு வாகனம் திரும்ப பெறப்பட்டதால், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், 'டி.எஸ்.பி., சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக' தெரிவித்திருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னணியில், மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் உள்ளனர் என்றும், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்தனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யவும் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் இதனை ஏற்று, விதிகளை மீறி சீருடையில் பேட்டி அளித்ததற்காகவும், உயர் அதிகாரிகள் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்த காரணத்திற்காகவும் சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
6 குற்றச்சாட்டு!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன
1. உயர் அதிகாரி அனுமதியின்றி பேட்டி அளித்தது, உயர் போலீஸ் அதிகாரிகள் மீது அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது
2. தனக்கு வாகனம் அளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது
3. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமியை அச்சுறுத்தியது, அவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டியது
4. ஏசி, பிரிண்டர் வசதி செய்யும் படி எஸ்ஐ முருகவேலிடம் அதிகாரம் செலுத்தியது
5. முறையான குறை தீர்ப்பு வழிமுறைகளை பின்பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காதது
6. உயர் அதிகாரியான மாவட்ட எஸ்பியின் அதிகாரத்தை கேள்வி கேட்டது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டது.