விண்ணப்பம் பரிசீலனையில் தில்லுமுல்லு; ரியல் எஸ்டேட் ஆணையம் மீது புகார்
விண்ணப்பம் பரிசீலனையில் தில்லுமுல்லு; ரியல் எஸ்டேட் ஆணையம் மீது புகார்
UPDATED : ஜூன் 04, 2025 03:57 AM
ADDED : ஜூன் 03, 2025 10:20 PM

சென்னை:'ரியல் எஸ்டேட் ஆணையத்தில், குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள், வெளிப்படை தன்மையுடன் நடப்பதில்லை' என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 5,381 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட நிலங்களில், புதிதாக கட்டுமான திட்டங்கள் மற்றும் மனைப்பிரிவுகளை ஏற்படுத்துவோர், சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து ஒப்புதல் பெற்ற பின், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே விற்பனை செய்ய முடியும்.
அதனால், பதிவு செய்ய, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதில், அதிகாரிகள் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதில்லை என, புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
வீடு, மனை திட்டங்களுக்கு ஒப்புதல் தரும் அரசு அமைப்புகளே, அது தொடர்பான பெரும்பாலான ஆவணங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு தந்து விடுகின்றன.
இதற்கு மேல், சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பிலும், உரிய ஆவணங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே, அதற்கான ஒப்புகை சீட்டு கிடைக்கும். இதன்பின், என்ன வரிசை முறைப்படி, விண்ணப்பங்களை ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியவில்லை.
விண்ணப்பம், இணைப்பு ஆவணம் தொடர்பாக சந்தேகம் மற்றும் விளக்கம் கேட்டு, இ - மெயில் வந்தாலும், எந்த நிலையில் உள்ள அதிகாரி அதை கேட்கிறார் என்பதும் தெரிவிக்கப்படுவது இல்லை.
ஒற்றை சாளர முறையில், கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, பரிசீலனையில் ஒவ்வொரு நிலையின் நிலவரமும் தெரிய வரும்.
ஆனால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் இதுபோன்ற வெளிப்படை தன்மை இல்லை; சரியான வரிசை முறையும் இல்லை. ஆணைய அலுவலர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து, சரிக்கட்டுவோரின் விண்ணப்பங்கள் உடனடியாக பதிவாகின்றன.
மற்ற விண்ணப்பங்கள் பல மாதங்கள் கிடப்பில் போடப்படும் நிலையே உள்ளது.
வீடு, மனை விற்பனையில் வெளிப்படை தன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் ஆணையத்தின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் பதில் என்ன?
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய கூடுதல் இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது:
ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு தனியான ஐ.டி., வழங்கப்படும். அதை பயன்படுத்தி, தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அவர் அறியலாம். அதில் விண்ணப்பம் யாரிடம் உள்ளது; யார் அதை பரிசீலனை செய்கிறார் என்ற தகவல் அளிக்கப்படாது.
இது தவிர, விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து விண்ணப்ப நிலையை அறிய, தனி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் அதிகாரிகள் யார் என்ற விபரம் அளிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.