தகவல் ஆணையத்தில் அவமதிப்பு மனித உரிமை கமிஷனில் புகார்
தகவல் ஆணையத்தில் அவமதிப்பு மனித உரிமை கமிஷனில் புகார்
ADDED : பிப் 18, 2025 04:35 AM
சென்னை : மாநில தகவல் ஆணையத்தில், மேல்முறையீடு விசாரணையின்போது, மனுதாரர்கள் அவமதிக்கப்படுவதாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகம் குறித்த விபரங்களை, பொதுமக்கள் அறிய, தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பொதுமக்களின் மனுக்களுக்கு, 30 நாட்களில் பொது தகவல் அலுவலர்கள் பதில் தர வேண்டும்.
தகவல் கிடைக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். இந்த மேல்முறையீடுகளை விசாரிக்கும்போது, மனுதாரர்கள் அழைக்கப்படுகின்றனர். மனுதாரர்களை வேண்டுமென்றே அவமதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட மனுதாரர்கள், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.ரத்னபாண்டியன் அளித்துள்ள புகார்:
தகவல் கிடைக்காதது தொடர்பான, 13 மனுக்கள் மீதான விசாரணைக்கு, தகவல் ஆணையம் அழைப்பாணைகள் அனுப்பி இருந்தது. விசாரணைக்கு சென்றபோது, அங்கு மனுதாரர்களுக்கு மட்டும் உட்கார இடவசதி இல்லை.
எனது, 13 மனுக்கள் தொடர்பான விசாரணை முடியும் வரை, பல மணி நேரம் நின்றபடி வாதங்களை எடுத்து வைத்தேன்.
இதேபோன்று, பல்வேறு மனுதாரர்களையும், குறிப்பிட்ட சில தகவல் ஆணையர்கள் நிற்க வைத்து அவமதிக்கின்றனர். இந்த மனித உரிமை மீறல் குறித்து, நியாயமான விசாரணை நடத்தி, தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.